பிள்ளைகள் கவனிக்காததால் பிச்சை எடுக்கும் டாக்டர் மனைவி நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு

வீடு, சொத்துகளை எழுதி வாங்கிவிட்டு கவனிக்காததால் பிச்சை எடுத்து வருவதாகவும், பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் டாக்டரின் மனைவி, கலெக்டரிடம் மனு அளித்தார்.

Update: 2022-04-25 15:17 GMT
வேலூர்

வீடு, சொத்துகளை எழுதி வாங்கிவிட்டு கவனிக்காததால் பிச்சை எடுத்து வருவதாகவும், பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் டாக்டரின் மனைவி, கலெக்டரிடம் மனு அளித்தார்.

குறைதீர்வு நாள் கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் வழங்கினர். முகாமில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
தனி வருவாய் கிராமம்
கணியம்பாடி ஒன்றியம் நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சிமன்ற தலைவர் சீதா தமிழ்ச்செல்வன், துணை தலைவர் கன்னியப்பன் மற்றும் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். அதில், கணியம்பாடி ஒன்றியத்தில் கத்தாழம்பட்டு ஊராட்சி, நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சி தனித்தனி ஊராட்சிகளாக உள்ளது. 2 ஊராட்சிகளுக்கும் கத்தாழம்பட்டு பகுதியே வருவாய் கிராமமாக உள்ளது. எனவே தனி ஊராட்சியாக இருக்கும் நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தை கத்தாழம்பட்டு வருவாய் கிராமத்தில் இருந்து பிரித்து தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும். 
நாகநதி முதல் அமிர்தி வரை செல்லும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனை சீரமைக்க வேண்டும். நஞ்சுகொண்டாபுரம் பெரிய ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நஞ்சுகொண்டாபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
திருவலம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஞானவேல் தலைமையில் நிர்வாகிகள் உதயகுமார், விஜயகுமார் ஆகியோர் அளித்த மனுவில், திருவலம் பேரூராட்சியில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடந்து வருகிறது. அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வியாழக்கிழமை வணிகர் தினம் என்பதால் அன்று அனைத்து வியாபார நிறுவனங்களும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் திருவலத்தில் 6-ந் தேதி வாரச்சந்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
பிச்சை எடுப்பதாக மனு
காட்பாடி சந்திரகணபதி நகரை சேர்ந்த கெஜலட்சுமி (வயது 70) என்பவர் கண்ணீர் மல்க கலெக்டரிடம் அளித்த மனுவில், எனது கணவர் ராதாகிருஷ்ணன் ஹோமியோபதி டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். எனக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் வீடு மற்றும் சொத்துக்களை ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டு தற்போது கவனிக்க மறுக்கின்றனர். உணவு, உடை, மருத்துவ செலவுக்கு கூட பணம் தருவதில்லை. இதனால் வாழ்வாதாரம் இன்றி வெட்டுவாணம் கோவில் பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறேன். வீடு, சொத்துகளை எழதி வாங்கி விட்டு என்னை கவனிக்காமல் விட்ட பிள்ளைகள் மீது முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
வீடு, சொத்துகளை மீட்டு தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன்பேரில் உரிய விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு கைத்திறன் பேசி, 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள் என்று ரூ.2,91,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.

மேலும் செய்திகள்