சிறுநீரக தானம் பெயரில் பண மோசடி; வெளிநாட்டு வாலிபர்கள் 3 பேர் கைது
பெங்களூருவில் சிறுநீரக தானம் பெயரில் பண மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.;
பெங்களூரு:
சிறுநீரக தானம்
பெங்களூரு ஜெயநகர் பகுதியில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியின் பெயரில் போலியாக இணையதள முகவரியை உருவாக்கிய மர்மநபர்கள் ஆஸ்பத்திரியில் சிறுநீரகங்கள் தானமாக பெறப்படுவதாகவும், சிறுநீரகங்களை தானம் கொடுப்பவர்களுக்கு ரூ.2 கோடி வரை கொடுக்கப்படும் என்று கூறி இருந்தனர். மேலும் சிறுநீரக தானத்திற்கு முன்பதிவு செய்ய பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறி இருந்தனர். இதனை நம்பிய ஏராளமானோர் சிறுநீரக தானம் செய்ய மற்றும் சிறுநீரகத்தை தானமாக பெற பணம் செலுத்தி இருந்தனர்.
ஆனால் பணம் செலுத்தியும் ஏராளமானோருக்கு சிறுநீரகம் கிடைக்கவில்லை. இதனால் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று பணம் கட்டியவர்கள் விசாரித்தனர். அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகம் நாங்கள் சிறுநீரக தானம் பெறவில்லை என்று கூறியது. மேலும் ஆஸ்பத்திரி பெயரில் மர்மநபர்கள் சிறுநீரக தானம் பெயரில் பண மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அந்த ஆஸ்பத்திரியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தென்கிழக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
3 பேர் கைது
இந்த நிலையில் போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் சிறுநீரக தானம் என்ற பெயரில் பண மோசடியில் ஈடுபட்டதாக எச்.பி.ஆர்.லே-அவுட் ஹெக்டேநகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த 3 வெளிநாட்டு வாலிபர்களை கைது செய்தனர். அவர்களில் 2 பேர் நைஜீரியாவை சேர்ந்தவர்கள். ஒருவர் கானாவை சேர்ந்தவர் ஆவார்.
மாணவர் விசாவில் இந்தியா வந்த 3 பேரும் விசா காலம் முடிந்த பின்னரும் தங்களது நாட்டிற்கு செல்லாமல் பெங்களூருவில் சட்டவிரோதமாக வசித்து வந்து உள்ளனர். மேலும் எளிதில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்து உள்ளது. மோசடி செய்து கிடைக்கும் பணத்தின் மூலம் 3 பேரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. கைதான 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.