100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-25 19:00 GMT
நீடாமங்கலம்:-

100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தக்கோரி நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவாரூர்-நீடாமங்கலம்

100 நாள் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருவாரூர் ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத் கலந்து கொண்டு பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் புலிகேசி, நகர செயலாளர் மாரியப்பன், சங்க நிர்வாகிகள் சிவப்பிரகாசம், பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில் சங்க ஒன்றிய தலைவர் ராதா, ஒன்றிய செயலாளர் மணியரசன், ஒன்றிய பொருளாளர் மார்க்ஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் செல்வராஜ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். 
இதில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த ரூ.281 ஊதியத்தை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 100 நாள்வேலை நாட்களை 200 நாளாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

திருத்துறைப்பூண்டி

அதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க தலைவர் ஜவகர், ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திர ராமன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாலு, நகர செயலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
முன்னதாக திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை சாலை அம்பேத்கர் சிலையில் இருந்து ஒன்றிய அலுவலகம் வரை ஊர்வலம் நடந்தது. 

மன்னார்குடி- கோட்டூர்

மன்னார்குடி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் வீரமணி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை நேரம் காலை 7 மணி என்பதை 9.30 மணியாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
கோட்டூரில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் ஒன்றிய தலைவர் சிவசண்முகம், ஒன்றிய செயலாளர் ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்