பீடி மண்டியில் செயல்பட்ட போலி மருத்துவமனைக்கு சீல் வைப்பு
பேரணாம்பட்டு அருகே பீடி மண்டியில் செயல்பட்டு வந்த போலி மருத்துவமனைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். தலைமறைவான பீடி தொழிலாளியை வலை வீசி தேடி வருகின்றனர்.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அருகே பீடி மண்டியில் செயல்பட்டு வந்த போலி மருத்துவமனைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். தலைமறைவான பீடி தொழிலாளியை வலை வீசி தேடி வருகின்றனர்.
அதிரடி சோதனை
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் பகுதியை சேர்ந்தவர் அபுல் உசேன் அகமது. பீடி தொழிலாளியான இவர் பீடி மண்டி நடத்தி வருகிறார். இதனால் காலை முதல் மாலை வரை பீடி மண்டியாகவும், மாலையில் பீடி மண்டியை மருத்துவமனையாகவும் பயன்படுத்தி வருவதாக மாவட்ட கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்துகலெக்டர் குமரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில் பேரணாம்பட்டு தாசில்தார் வெங்கடேசன் தலைமையில், மண்டல துணை தாசில்தார் வடிவேல், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் மற்றும் வருவாய்த்துறையினர் சாத்கர் கிராமத்திற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சீல் வைப்பு
அப்போது காலை முதல் மாலை வரை பீடி மண்டியாகவும், மாலையில் மருத்துவமனையாகவும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அபுல் உசேன் அகமது என்ற பீடி தொழிலாளி முறையாக ஆங்கில மருத்துவம் படிக்காமல் சுமார் 6 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து வருவாய்த்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் போலி மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள போலி டாக்டர் அபுல் உசேன் அகமது என்பவரை பேரணாம்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.