‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மண்சாலையான தார்சாலை
கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி அருகே நேதாஜிபுரம் பகுதியில் உள்ள சாலை கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. தொடர் மழையால் சாலை அரிக்கப்பட்டு, தற்போது மண்சாலை போல காட்சியளிக்கிறது. இது தவிர ஆங்காங்கே குழிகளும் உருவாகி உள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தோஷ், கோவை.
கடும் துர்நாற்றம்
காரமடையில் தோலம்பாளையம் செல்லும் சாலையில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாததால், சுகாதாரமின்றி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
அந்த பகுதிக்கு அருகில் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்கள் இருக்கிறது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் அவசரத்துக்கு இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண்குமார், காரமடை.
விபத்து அபாயம்
கிணத்துக்கடவு அருகே பனப்பட்டியில் இருந்து சுல்தான்பேட்டை அருகே பொன்னாக்கானி வழியாக செல்லும் சாலையின் இருபுறமும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது.
இந்த புதர் செடிகளின் கிளைகள் சாலை வரை நீண்டு வளர்ந்து உள்ளதால், டிரைவர்கள் எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்து ஏற்படும் முன் அந்த புதர் செடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலுமணி, பனப்பட்டி.
சாலை சீரமைக்கப்படுமா?
அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் அருகே உள்ள சாலையில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டு உள்ளது. அந்த குழிகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது தவிர அந்த வழியாக சென்று வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
ராஜூ, அன்னூர்.
குடிநீர் தொட்டி இடமாற்றப்படுமா?
கொளப்பள்ளி அருகே குறிஞ்சி நகரில் அண்ணா சிலையில் இருந்து படச்சேரி வழியாக சேரம்பாடிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையோரத்தில் குடிநீர் தொட்டி ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சாலை குறுகலாக உள்ளதால், அந்த வழியாக வாகனங்கள் சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்கும் வகையில் குடிநீர் தொட்டியை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.
ரஞ்சித், கொளப்பள்ளி.
சுகாதார சீர்கேடு
கருமத்தம்பட்டி அருகே சோமனூர்-சாமளாபுரம் மாநில நெடுஞ்சாலையில் நொய்யல் ஆற்றங்கரையில் கோழி, ஆடு, மாடு இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டி செல்கிறார்கள். இதனால் அந்த பிரதான சாலையோரத்தில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதை கருமத்தம்பட்டி நகராட்சி அதிகாரிகள் கவனிப்பார்களா?
தனலட்சுமி, சோமனூர்
குளத்தை ஆக்கிரமித்த ஆகாய தாமரை
சூலூர் பெரிய குளத்தின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதியை நோக்கி ஆகாய தாமரை அடர்த்தியாக வளர்ந்து வருகிறது. இது குளத்தையே ஆக்கிரமித்து வளர்ந்து வருவதால், தண்ணீரை சேமித்து வைப்பது சவாலாகிறது. மேலும் தண்ணீர் மாசுபட்டு வருகிறது. எனவே அங்கு வளர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.
தேவராஜ், சூலூர்.
பட்டுப்போன மரம்
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட குருநல்லிபாளையத்தில் இருந்து வடசித்தூர் செல்லும் சாலையோரத்தில் பட்டுப்போன மரம் ஒன்று நிற்கிறது. இது எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். அசம்பாவித சம்பவம் ஏதேனும் நடைபெறும்முன் அந்த மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாசிலாமணி, வடசித்தூர்.
குண்டும், குழியுமான சாலை
கணபதியில் இருந்து மணியகாரம்பாளையம், உடையாம்பாளையம் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு பஸ்கள் உள்பட வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் அங்குள்ள சாலையில் உடையாம்பாளையம், நஞ்சேகவுண்டன் புதூர் ஆகிய இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் வாகனங்கள் சென்று வரும்போது, புழுதி பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
சித்து, கணபதி.
போக்குவரத்து இடையூறு
கோவை நல்லாம்பாளையம் சாலையோரத்தில் பழுதான மோட்டார் சைக்கிள்களை சிலர் போட்டு வைத்து உள்ளனர். இதன் காரணமாக அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அங்கு போட்டு வைக்கப்பட்டு உள்ள பழுதான மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
பழனிசாமி, கண்ணப்ப நகர்.
மேம்பாலம் திறக்கப்படுமா?
கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, 2 மாதங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. எனவே அந்த மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹரிஸ், கோவை.