பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

எருமாடு அருகே பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-04-25 14:39 GMT
பந்தலூர்

எருமாடு அருகே பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். 

பட்டா இல்லை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எருமாடு அருகே வெட்டுவாடி உள்ளது. இங்கு அரசு கூட்டுறவு சங்க நிலத்தில் ஏராளமான பொதுமக்கள் 55 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். அவர்கள் தேயிலை, பாக்கு, தென்னை, மிளகு, காபி, வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு உள்ளனர். 

இந்த நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனுக்கள் கொடுத்தனர். மேலும் பல்வேறு போராட்டங்களும் நடத்தினார்கள். இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நில அளவை செய்யப்பட்டது. மேலும் ஆவணங்களும் பெறப்பட்டது. ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

 
போராட்டம்

இந்த நிலையில் பட்டா கேட்டு இன்று வெட்டுவாடியில் போராட்ட குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்ட குழு தலைவர் ஏசையன் தலைமை தாங்கினார். 

இதை அறிந்த வருவாய்துறையினர் விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். 

பேச்சுவார்த்தை

பின்னர் கூடலூர் ஆர்.டி.ஓ. சரவணகண்ணன் தலைமையில் தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம், பந்தலூர் தாசில்தார் நடேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம், வருவாய்ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது வருவாய்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால், அதை சரிபார்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. உறுதி அளித்தார். இதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. 

மேலும் செய்திகள்