நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.
செய்முறை தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மே மாதம் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வை 200 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 60 ஆயிரத்து 371 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
பொதுத்தேர்வுக்கு முன்பு செய்முறை தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற மே மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது.
சுழற்சி முறையில் நடந்தது
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டங்களில் 146 மையங்களில் நடந்த செய்முறை தேர்வில் அறிவியல் பிரிவு சார்ந்த பாடங்களை எடுத்து படிக்கும் மாணவர்கள் (இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல்) காலை, மாலை என சுழற்சி முறையில் கலந்து கொண்டனர்.
அகமதிப்பீட்டுக்கு 10 மதிப்பெண்கள், செய்முறை தேர்வுக்கு 20 மதிப்பெண்கள் என மொத்தம் 30 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டுகளில், 3 மணி நேரமாக நடந்த செய்முறை தேர்வு, நடப்பு கல்வி ஆண்டில், 2 மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
156 மையங்கள்
இந்த செய்முறை தேர்வில் பிளஸ்-1, பிளஸ்- 2 மாணவ, மாணவிகள் 19 ஆயிரத்து 866 பேர் கலந்து கொண்டனர். அதேபோல் எஸ்.எஸ்.எல்.சி., அறிவியல் பாடத்திற்குரிய செய்முறை தேர்வு நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை 156 மையங்களில் நடக்கிறது. இந்த செய்முறை தேர்வில், 20 ஆயிரத்து 502 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.