மூதாட்டியிடம் மொத்தமாக பலகாரம் வாங்கிய கலெக்டர்

தள்ளாத வயதிலும் உழைக்கும் மூதாட்டியிடம் கலெக்டர் மொத்தமாக பலகாரம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சி அடைய செய்தது.

Update: 2022-04-25 13:45 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் தரை தளத்தில் அமர்ந்து இருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரடியாக வந்து மனுக்களை வாங்கினார். அப்போது அந்த பகுதியில் 80 வயதை கடந்த ஒரு மூதாட்டி, பணியாரம் உள்ளிட்ட பலகாரங்களை விற்பனை செய்வதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் வந்தார். அவரிடம் கனிவுடன் பேசிய கலெக்டர் செந்தில்ராஜ், உங்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கிறதா? என்று விசாரித்தார். அதற்கு மூதாட்டி, முதியோர் உதவித்தொகை கிடைப்பதாக தெரிவித்தார். என்ன வியாபாரம் செய்கிறீர்கள்? பலகாரம் என்ன விலை? என்று விசாரித்து தெரிந்து கொண்டார். தள்ளாத வயதிலும் உழைக்கும் மூதாட்டியை பாராட்டினார்.

தொடர்ந்து அந்த மூதாட்டி ஒரு சிறிய தூக்குவாளியில் வைத்திருந்த பணியாரம் அனைத்தையும் மொத்தமாக வாங்கிக்கொள்வதாக கூறி ரூ.200-ஐ அவரிடம் கலெக்டர் கொடுத்தார். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட மூதாட்டி நன்றி தெரிவித்தார். அதன்பிறகு அந்த பணியாரத்தை ஊழியர்களுக்கு வழங்குமாறு கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தினார். கலெக்டரின் இந்த மனிதநேய செயல், அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

மேலும் செய்திகள்