திருச்சியில் தொழிலாளி அடித்துக்கொலை

திருச்சியில் உணவு பொட்டலத்தை வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்துக்கொன்ற மற்றொரு தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-04-25 13:44 GMT
திருச்சி, ஏப்.26-
திருச்சியில் உணவு பொட்டலத்தை வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்துக்கொன்ற மற்றொரு தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
தொழிலாளி
திருச்சி முதலியார்சத்திரத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 53). இவர் முதலியார்சத்திரம் குட்ஷெட் யார்டில் லாரி ஒப்பந்ததாரராக உள்ளார். இவரிடம், அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்கிற பரசெல்வம் (50) தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 23-ந் தேதி மற்றொரு லாரி ஒப்பந்ததாரர் ஒருவர் இறந்துவிட்டார். இதனால் அவருடைய இறுதிச்சடங்கிற்கு தொழிலாளர்கள் அனைவரும் நேற்று முன்தினம் சென்று இருந்தனர். இந்தநிலையில் அங்கு உணவு விற்கும் பெண், விஜயன் என்ற தொழிலாளிக்கான உணவு பொட்டலத்தை அங்குள்ள டீக்கடையில் கொடுத்து அவர் வந்தால் கொடுத்துவிடும்படி கூறி சென்றார்.
கட்டையால் தாக்கி கொலை
நேற்று முன்தினம் இரவு விஜயன் டீக்கடைக்கு சென்று உணவு பொட்டலத்தை கேட்டுள்ளார். அதற்கு அந்த உணவு பொட்டலத்தை அவருடன் பணியாற்றும் மற்றொரு தொழிலாளியான பழனிவேல் வாங்கி சாப்பிட்டுவிட்டதாக கூறி உள்ளனர். இதனால் விஜயன் பழனிவேலிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த செல்வம், பழனிவேலுக்கு ஆதரவாக பேசினார். இதனால் செல்வத்துக்கும், விஜயனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த விஜயன் செல்வத்தை தாக்கிவிட்டு சென்றுவிட்டார். பின்னர் நள்ளிரவு 11 மணிக்கு மேல் மீண்டும் அங்கு சென்ற விஜயன், தூங்கி கொண்டு இருந்த செல்வத்தின் தலையில் உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் செல்வம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
வலைவீச்சு
உடனே விஜயன் அங்கிருந்து தப்பி சென்றார். இது பற்றி அந்த பகுதியினர் பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பி சென்ற விஜயனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்