அனுமன் பஜனை விவகாரத்தில் கைதான நவ்நீத் ரானா, ரவி ரானா வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு
தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய நவ்நீத் ரானா, ரவி ரானாவின் மனுவை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.;
மும்பை,
தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய நவ்நீத் ரானா, ரவி ரானாவின் மனுவை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
அனுமன் பஜனை விவகாரம்
மும்பை பாந்திராவில் உள்ள முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மாதோஸ்ரீ வீட்டின் முன் அனுமன் பஜனை பாடப்போவதாக அமராவதி பெண் எம்.பி. நவ்நீத் ரானா, அவரது கணவர் ரவி ரானா எம்.எல்.ஏ. கடந்த வெள்ளிக்கிழமை மும்பை வந்தனர். அப்போது சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த கூடாது என போலீசார் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தனர்.
இந்தநிலையில் சனிக்கிழமை மும்பையில் உள்ள நவ்நீத் ரானா வீட்டின் முன் சிவசேனா தொண்டர்கள் அதிகளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து நவ்நீத் ரானா, ரவி ரானாவை போலீசார் கைது செய்தனர். 2 பேரையும் மும்பை கோர்ட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. போலீசார் கடந்த சனிக்கிழமை இருபிரிவினர் இடையே பகையை தூண்டியது, தேச துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் நவ்நீத் ரானா, ரவி ரானா மீது வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அவர்கள் மீது 2-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஐகோர்ட்டு மறுப்பு
இந்தநிலையில் அவர்கள் தங்கள் மீதான 2-வது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வாரலே, மோதக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் நவ்நீத் ரானா, ரவி ரானா ஆகியோர் அனுமன் பஜனை என்ற போர்வையில் அரசு எந்திரத்திற்கு சவால் விட முயன்றனர், திட்டமிட்டு அவர்கள் இதை செய்தனர் என கூறினார்.
இதையடுத்து முதல்-மந்திரியின் வீட்டின் பஜனை பாடுவது போன்ற மதம் சார்ந்த செயலில் ஈடுபடுவது சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என அரசு நினைப்பதில் நியாயம் இருப்பதாக கூறிய நீதிபதிகள், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய நவ்நீத் ரானா, ரவி ரானாவின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
----