திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தற்கொலை முயற்சி
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு மூதாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு மூதாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் பாதுகாப்பு
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்வு கூட்டத்தின் போது மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
அதைத் தடுக்க கலெக்டர் அலுவலக பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வரும் பொதுமக்களையும், அவர்களின் உடமைகளையும் போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்புகின்றனர்.
கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூதாட்டி ஒருவர் தனது கையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து வந்து, தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்த போலீசார் ஓடிச்சென்று மூதாட்டியை தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் மூதாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் மூதாட்டி கூறியதாவது:-
சொத்து அபகரிப்பு
எனது பெயர் அன்னப்பூரணி (வயது 70). நான் பெரியகிளாம்பாடி, கொல்லகொட்டா கிராமத்தில் வசித்து வருகிறேன். என்னுடைய கணவர் பெயர் லட்சுமணன். அவர் இறந்துவிட்டார். நான் தனியாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் எனது குடும்ப சொத்தை சிலர் அபகரித்து விட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது சொத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் போலீசார் இதுபோன்று முயற்சியில் இனி ஈடுபடக் கூடாது, என எச்சரித்து மூதாட்டியை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர்.