மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி
மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி நடந்தது.
திருச்சி:
திருச்சி மாவட்ட அளவிலான ‘பி' கிரேடு ஐவர் பூப்பந்தாட்ட போட்டி திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகராட்சி திடலில் நேற்று நடந்தது. சந்தானகிருஷ்ணன் பூப்பந்தாட்ட கிளப் சார்பில் நடந்த இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 20 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதன் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீரங்கம் ஓ.பி.பி.சி. ‘ஏ' அணியும், ஆர்.ஜெ.ஜெ.எஸ். ‘ஏ' அணியும் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஸ்ரீரங்கம் ஓ.பி.பி.சி. 'ஏ' அணி 35-23, 35-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. தோல்வி அடைந்த ஆர்.ஜெ.ஜெ.எஸ். ‘ஏ' அணி 2-வது இடத்தை பிடித்தது. 3-வது இடத்துக்கான போட்டியில் பொன்மலை ரெயில்வே அணியை தோற்கடித்து ஸ்ரீரங்கம் ஓ.பி.பி.சி. ‘பி' அணி வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது. முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரத்துடன் சுழற்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.