ஈரோட்டில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்வு

ஈரோட்டில் காய்கறிகளின் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்தது.

Update: 2022-04-24 20:55 GMT
ஈரோடு
ஈரோட்டில் காய்கறிகளின் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்தது.
விலை உயர்வு
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. அங்கு தாளவாடி, சத்தியமங்கலம், கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டதால், மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது. இதனால் காய்கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் காய்கறிகளின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.25 வரை உயர்ந்து உள்ளது.
தக்காளி
குறிப்பாக தக்காளி கடந்த வாரம் 50 டன் வரத்து ஏற்பட்டது. மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் சுமார் 20 டன் தக்காளி கொண்டு வரப்பட்டு இருந்தது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது. கடந்த 10 நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
பீன்ஸ் - ரூ.80, பீட்ரூட் - ரூ.50, கேரட் - ரூ.50, கத்தரிக்காய் - ரூ.25, வெண்டைக்காய் - ரூ.40, பீர்க்கங்காய் - ரூ.60, பாகற்காய் - ரூ.50, முள்ளங்கி - ரூ.30, முருங்கைக்காய் - ரூ.40, இஞ்சி - ரூ.50, முட்டைக்கோஸ் - ரூ.25.

மேலும் செய்திகள்