மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கிராமசபை கூட்டம்
பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர்
ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கூரப்பாளையம் ஊராட்சியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டங்கள் மூலமாக கிராம பகுதிகளில் உள்ளவர்களின் வறுமை நீக்கப்பட்டு பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு, சீரான குடிநீர் வழங்கும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். கிராமங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுபாலன், வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி, மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமாசங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அந்தியூர்
அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பச்சாம்பாளையம் கிராம ஊராட்சியின் கிராம சபை கூட்டம் பள்ளிபாளையம் அரசு தொடக்க பள்ளிக்கூட வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி தலைவி பானுமதி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வேளாண்மை திட்டத்தின் கீழ் கடன் அட்டை வழங்குவது, பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்ற மாணவ- மாணவிகளை பள்ளியில் சேர்ப்பது மற்றும் ஊராட்சியில் நீடித்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்து விளக்கப்பட்டது. இதையொட்டி கொல்லபாளையம் கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட ஆற்று குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
கூட்டத்தில் துணைத்தலைவர் பூபதி, ஒன்றிய குழு உறுப்பினர் தனலட்சுமி சீனிவாசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் கேசவன் நன்றி கூறினார்.
வேம்பத்தி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்துக்கு அதன் தலைவி சரஸ்வதி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், ‘ஊராட்சியில் அடிப்படை வசதிகள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, முழு சுகாதாரம் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விளக்கி பேசப்பட்டது. இதையொட்டி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இதில் துணைத்தலைவர் முனியப்பன், கவுன்சிலர் வையாபுரி, ஊராட்சி அதிகாரி சுபா உள்பட பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் மணிமேகலை நன்றி கூறினார்.
சின்னத்தம்பிபாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம் அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி தலைவி சுமதி தவசியப்பன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்குவது உள்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் துணைத்தலைவர் துரையன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், காவல்துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் தேவராஜ் நன்றி கூறினார்.
நகலூர்
நகலூர் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்துக்கு அதன் தலைவர் கண்ணம்மாள் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், ‘வறுமை இல்லா ஊராட்சி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, சுகாதாரம்,’ குறித்து விளக்கி கூறப்பட்டது. இதில் கலந்து கொண்ட பெருமாபாளையம் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு சாலை வசதி வேண்டி கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
இதில் ஊராட்சி துணைத்தலைவர் ரம்மியா பிரபா, கால்நடை மருத்துவர் மோகனசுந்தரம், வேளாண் உதவி அலுவலர் திருமலைசாமி உள்பட அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் எட்வின் நன்றி கூறினார்.
மைக்கேல்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம் கிணத்தடி அரசு உண்டு உறைவிட நடுநிலை பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மைக்கேல்பாளையம் ஊராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், ‘மைக்கேல்பாளையம் ஊராட்சியை வறுமை இல்லாத ஊராட்சியாக மாற்றுவது, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, அனைவருக்கும் குடிநீர் மற்றும் சுகாதார வசதி மேற்கொள்வது, மலைவாழ் மக்களுக்கு பாரத பிரதமரின் கடன் அட்டை வழங்குவது, பெண் குழந்தைகள் பாதுகாப்பு,’ குறித்து பேசப்பட்டது. பொதுமக்கள் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி, சாக்கடை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்களாக அளித்தனர்.
இதில் துணைத்தலைவர் சக்திவேல், வேளாண் துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.
பெருந்துறை
பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், திருவாச்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. பூவம்பாளையம் காசி மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த இந்த கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் சோளி எஸ்.பிரகாஷ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், அனைத்து துறைகளிலும் நிலைத்த வளர்ச்சியை ஊராட்சி பகுதி முழுவதும் ஏற்படுத்த, மக்கள் அனைவரும் ஒத்துழைப்பை வழங்குவது என்பது உள்பட 12 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், பூவம்பாளையத்தில் இருந்து வாவிக்கடை செல்லும் ரோட்டை புதுப்பித்து போடவேண்டும் என்கிற பூவம்பாளையம் கிராம மக்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் ராஜா, திருவாச்சி ஊராட்சி தி.மு.க. செயலாளர் எஸ்.என்.ரங்கசாமி, பூவம்பாளையம் மோகன்ராஜ், சின்னியம்பாளையம் சண்முகம், உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ்பிரபு, சுகாதார ஆய்வாளர் தினகரன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பட்டக்காரன்பாளையம்
பட்டக்காரன்பாளையம் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் அதன் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி தலைவி ஹேமலதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தங்கராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ‘ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும், வளர்ச்சி திட்டப்பணிகளை திறம்பட நிறைவேற்றி, ஊராட்சியில் நீடித்த வளர்ச்சியை உறுதி படுத்துவது,’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மூங்கில்பாளையம் ஊராட்சியின் சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் எஸ்.பி.அருணாச்சலம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜானகிராமன் முன்னிலை வகித்தார். பார்வையாளராக ஊராட்சி ஒன்றிய பணிகள் மேற்பார்வையாளர் வையாபுரி கலந்து கொண்டார். கூட்டத்தில், ‘வளர்ச்சி திட்டப்பணிகளை தொய்வில்லாமல் நிறைவேற்றி, முழு வளர்ச்சியடைந்த ஊராட்சியாக மாற்றம் செய்வது என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள்,’ நிறைவேற்றப்பட்டன. இதில் மகளிர் குழு பெண்கள், பொதுமக்கள் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
சின்னவீரசங்கிலி
பெரியவீரசங்கிலி நடுநிலைப்பள்ளிக்கூட மைதானத்தில் நடந்த சின்னவீரசங்கிலி ஊராட்சியின் சிறப்பு கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் கண்ணம்மா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரம்யாசுரேஷ் முன்னிலை வகித்தார். இதில் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பார்வையாளராக அலுவலர் சுரேந்தர் கலந்து கொண்டார்.
கூட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் மேற்கொண்டுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளில் தீவிர கவனம் செலுத்தி, அது நிலைத்து நிற்கும் வகையில் பணிகளை மேற்கொள்வது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.