தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-04-24 20:36 GMT
'தினத்தந்தி'க்கு பாராட்டு
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சி காளிப்பட்டியில் 2 பெண்கள் கழிப்பறை உள்ளது. ஒரு கழிப்பறையில் தண்ணீர் தொட்டியை முறையாக சுத்தப்படுத்தாததால் துர்நாற்றம் வீசுகிறது. மற்றொரு கழிப்பறையில் கழிவுநீர் வெளியேறுவதால் அந்த வழியாக செல்பவர்கள் முகம் சுழிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் கழிப்பறையில் தண்ணீர் தொட்டியை சீரமைத்து, கழிவுநீர் செல்லும் குழாயை சரி செய்து பிரச்சினைக்கு தீர்வு கண்டனர். இதற்கான நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-ஊர்மக்கள், காளிப்பட்டி, நாமக்கல்.
ஆபத்தான மின்கம்பம் 
சேலம் மாநகராட்சி 12-வது வார்டு மணக்காடு ராஜகணபதி நகரில் இரும்பு மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சாய்ந்து விடும் அபாயம் உள்ளதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். பொதுமக்கள் உதவியுடன் மின் ஊழியர்கள் மின்கம்பம் சாயாமல் இருக்க கயிற்றால் கட்டி இருக்கிறார்கள். எனவே பெரும் ஆபத்து ஏற்படும் முன்பு சாய்ந்துள்ள மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் வைக்க வேண்டும்.
-ராமஜெயம், 12-வார்டு, சேலம்.
பயன்பாடு இல்லாத குடிநீர் எந்திரம்
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான உபகரணங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டது. அதுவும் சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. தற்போது குடிநீர் வழங்கும் எந்திரம் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் கூறியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த குடிநீர் எந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-ஊர்மக்கள், அதியமான்கோட்டை, தர்மபுரி.
புத்தகங்கள் இல்லாத நூலகம்
கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் தினமும் மாணவர்கள், பொதுமக்கள் வந்து படித்து விட்டு செல்கின்றனர். அந்த நூலகத்தில் வரலாற்று சாதனை படைத்த எந்தவொரு தலைவர்களின் வரலாறு, பழமையான வரலாற்று புத்தகங்கள், தலைவர்களின் படங்கள் இல்லாதது வருத்தம் அளிக்கின்றது. மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரன், கிருஷ்ணகிரி.
சாலையில் தேங்கும் மழைநீர் 
சேலம் காசக்காரனூர், சூரமங்கலம் மெயின் ரோட்டில் சாலையில் கழிவுநீருடன், மழைநீரும் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அந்த பகுதியில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் கடைகளுக்குள் மழைநீர் செல்வதால் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சூரமங்கலம், சேலம்.
ஆக்கிரமிக்கப்பட்ட மழைநீர் கால்வாய்
சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த ஆறகளூர் கிராமத்தில் மழைநீர் செல்லும் கால்வாயில் கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி காட்சி அளிக்கிறது. சிலர் கால்வாயை ஆக்கிரமித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கருவேல மரங்களை வெட்டி அகற்றி மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-வேலாயுதம், ஆரகளூர், சேலம்.
நோய் பரவும் அபாயம்
தர்மபுரி புறநகர் பஸ் நிலையம் உள்ளே நகராட்சி கட்டண கழிவறை அமைந்துள்ளது. இந்த கழிவறையில் கழிவு நீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தினமும் கழிவறையை சுத்தம் செய்து தூய்மையாக வைக்க வேண்டும்.
-தமிழ்ச்செல்வி,  தர்மபுரி.
தெருநாய் தொல்லை
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதிநகர் பகுதியில் தெருநாய் ஒன்று சில நாட்களாக அந்த பகுதி பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நகராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்த தெருநாயை பிடித்து செல்ல வேண்டும்.
-கருப்பையா, ஆத்தூர்.
===

மேலும் செய்திகள்