‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
ரோட்டில் பள்ளம்
சித்தார் வழியாக பவானி- மேட்டூர் ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள பாலம் அருகே 2 ரோடுகள் பிரியும் இடத்தில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி காயம் அடைந்து செல்கின்றனர். மேலும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி பெரும் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே ரோட்டில் உள்ள பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ஜி.மோகன், சித்தார்.
மதுபிரியர்களால் இடையூறு
அந்தியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கெட்டி விநாயகர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு தினமும் அந்தியூர், தவிட்டுபாளையம், அத்தாணி, ஆப்பக்கூடல், வெள்ளித்திருப்பூர், கோவிலூர், எண்ணமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காலை முதல் மாலை வரை சாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கிறார்கள். குறிப்பாக கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு இடையூறாக மது பிரியர்கள் குடித்துவிட்டு கோவில் வாசல்படி அருகே அலங்கோலமாக படுத்து உள்ளனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்க வேண்டியது உள்ளது. எனவே பக்தர்கள் முறையாக சாமி தரிசனம் செய்ய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அந்தியூர்.
குப்பைகளை அகற்ற வேண்டும்
கோபியில் இருந்து குன்னத்தூர் செல்லும் ரோட்டில் வடுகபாளையம் பிரிவு ரோடு உள்ளது. இந்த ரோட்டில் சுடுகாட்டு பகுதியில் குப்பைகள் அதிகமாக தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
சுகாதாரக்கேடு
புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பங்களாப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே அத்தாணி- சத்தியமங்கலம் ரோட்டில் சாலையோரமாக குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. இந்த குப்பை கழிவுகளில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், அந்த பகுதியில் சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்தி, அந்த பகுதியை சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பங்களாப்புதூர்.
சாலை சீரமைக்கப்படுமா?
ஈரோடு கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் காளைமாட்டு சிலை பகுதியில் இருந்து நாடார்மேடு செல்லும் பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அங்கு மழை பெய்யும்போது மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும், சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்பனா, ஈரோடு.
நிழற்குடை வேண்டும்
ஈரோடு சவிதா சிக்னல் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு நிழற்குடை இல்லாததால் பயணிகள் பெரும் அவதி அடைகிறார்கள். மழை பெய்யும்போது நனைந்தபடி பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அங்கு நிழற்குடை அமைத்து கொடுக்க அரசு அதிகாரிகளோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரகாஷினி, ஈரோடு.