போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது
சேலத்தில் வாகன சோதனையின் போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்:-
சேலத்தில் வாகன சோதனையின் போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகன சோதனை
சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 7 மணிக்கு போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் சின்ன வீராணத்தை சேர்ந்த சரவணன் (வயது 32), அல்லிக்குட்டையை சேர்ந்த கோவிந்தராஜ் (36) என்பதும், 2 பேரும் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.
பின்னர் அவர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் திடீரென போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரத்தை கீழே தள்ளி தாக்கிவிட்டு, தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகாா் செய்தார். அதன்பேரில் போலீசார் தலைமறைவாக இருந்த சரவணன், கோவிந்தராஜ் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்தநிலையில், நேற்று முன்தினம் சேலத்தில் பதுங்கி இருந்த சரவணன், கோவிந்தராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.