பொன்னார் கிளை வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
பொன்னார் கிளை வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய டெல்டா பாசன விவசாயிகள் பயனடையும் வகையில் பிரதான பாசன வாய்க்காலின் கிளை வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. பொன்னார் பிரதான வாய்க்கால் மற்றும் அதன் 8 கிளை வாய்க்கால்கள் மூலம் 4 ஆயிரத்து 694 ஏக்கர் நஞ்சை வயல்கள் பாசனம் பெறுகிறது. பொன்னார் பிரதான வாய்க்கால் தூர்வாரப்பட்ட நிலையில் அதன் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருந்தன. இதனால் விவசாயிகள் பாசன வசதி கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர். இந்தநிலையில் பொன்னார் பிரதான வாய்க்காலின் 1, 2, 3-ம் எண் வாய்க்கால்கள், பாலசுந்தரபுரம் வாய்க்கால் ஆகியவற்றை ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். 15.51 கிலோ மீட்டர் நீளமுள்ள வாய்க்கால்கள் தூர் வாரப்படுவதின் மூலம் மதனத்தூர், வாழைக்குறிச்சி, அடிக்காமலை, மேலக்குடிகாடு, தென்கச்சிபெருமாள்நத்தம், கீழகுடிக்காடு, இடங்கண்ணி, அண்ணங்காரம்பேட்டை, தா.பழூர், தாதம்பேட்டை, பாலசுந்தரபுரம், கூத்தங்குடி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்து 800 ஏக்கர் நிலப்பரப்பில் நஞ்சை வயல்கள் பாசனம் பெறும். இந்த நிகழ்ச்சியில் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம், மருதையாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் சாந்தி, காரைக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா விஜயகுமார், உதவி பொறியாளர் மோகன்ராஜ், தா.பழூர் வருவாய் ஆய்வாளர் தமிழரசன், கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.