முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா
விருத்தாசலம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடைபெற்றது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் செல்வராஜ் நகரில் உள்ள முத்துமாரியம்மன், விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோவிலில் சித்திரை மாத செடல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து பால் குடங்கள் எடுத்தும், உடம்பில் செடல் குத்தியும் ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் விருத்தாசலம் சன்னதி வீதி, பாலக்கரை, கடலூர் சாலை வழியாக கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகமும், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் அருள்பாலிக்க மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற அம்மன் வீதிஉலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.