ரூ.2½ லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்
சுவாமிமலை பகுதியில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கபிஸ்தலம்:-
சுவாமிமலை பகுதியில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் பேரில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மேற்பார்வையில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் சுவாமிமலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சுவாமிமலை அருகே உள்ள பாபுராஜபுரம் வீரா நகரில் ஒரு வீட்டில் போதைப்பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.
போதைப்பொருட்கள்
அதன்படி அந்த வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போதைப்பொருட்களை பதுக்கி வைத்த கும்பகோணத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது31) என்பவரை கைது செய்தனர்.