பண்ருட்டியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி பண்ருட்டியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி,
விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க கோரி பண்ருட்டி வணிகர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து பண்ருட்டி- சென்னை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத் தலைவர் சண்முகம், பொதுச்செயலாளர் வீரப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் வணிகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மத்திய அரசின் நகாய் நிறுவனத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், பொதுச்செயலாளர் வீரப்பன், தொழிலதிபர் ஜாகீர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். அப்போது மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.
இதில் வர்த்தக பிரமுகர்கள் கே.என்.சி.மோகன், ராஜா, எஸ்.வி.ஜூவல்லர்ஸ் எஸ்.வி.அருள், வள்ளி விலாஸ் சரவணன், தமிழ்நாடு முந்திரி உற்பத்தி, மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் சி.ஆர்.செல்வமணி, மலர் வாசகன், நகரசபை முன்னாள் துணைத்தலைவர் விஜயரங்கன், ராஜா ஸ்டோர்ஸ் கருணாநிதி, அசோக் ராஜ் ஜெயின், புத்தன், காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எல்.என்.புரம் ஊராட்சி மக்கள் சார்பில் சமையல் செய்யும் போராட்டம் வணிகர்களின் ஆதரவுடன் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டது.