கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள தூய மங்கள அன்னை ஆலய திருவிழா கடந்த 17-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு 3 தேர்களில் மங்கள அன்னை அலங்கரிக்கப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாக வலம் சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று இரவு 5 தேர்களில் தூய மங்கள அன்னை, லூர்து மாதா, உயிர்த்த ஆண்டவர், செபஸ்தியார், மைக்கேல் சம்மனசு ஆகியோரின் திருவுருவ சிலைகள் அலங்கரிக்கப்பட்டு குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி மற்றும் தூய மங்கள அன்னை ஆலயத்தின் பங்கு தந்தை ரெஜிஸ் ஆகியோரால் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, வாண வேடிக்கைகளுடன் ஆடம்பர தேர் பவனி ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்தது. இதில் ஆங்காங்கே உள்ள பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதனைத்தொடர்ந்து வருகிற 28-ந் தேதி கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.