குட்டிகளுடன் உலா வந்த காட்டெருமைகள்

கொடைக்கானலில் குட்டிகளுடன் காட்டெருமைகள் உலா வந்தன.

Update: 2022-04-24 18:34 GMT
கொடைக்கானல்: 

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் நகர்ப்பகுதிக்குள் காட்டெருமைகள் அவ்வப்போது புகுந்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்துவது வாடிக்கையாகி விட்டது. அதன்படி நேற்று பகல் 3 மணி அளவில், அப்சர்வேட்டரி அருவியில் இருந்து தேவதை அருவி செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள், குட்டிகளுடன் உலா வந்தன. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகள், அந்த சாலையில் செல்லாமல் வேறு வழியாக வாகனங்களை திருப்பி சென்றனர். 

இதற்கிடையே சுற்றுலா பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி காட்டெருமைகளை புகைப்படம் எடுத்தனர். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்த சாலையில் காட்டெருமைகள் நின்று விட்டு, அருகே உள்ள தனியார் தோட்டத்துக்குள் சென்று விட்டன. 

அதன்பிறகே பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் நிம்மதி அடைந்தனர். கொடைக்கானல் நகருக்குள் காட்டெருமைகள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

இதேபோல் வனவிலங்குகளின் அருகே சென்று, சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுப்பதை தடுக்க விழிப்புணர்வு பேனர்களை வனத்துறையினர் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்