மேலும் ஒரு கைதி உடலை கீறி தற்கொலை முயற்சி

மதுரை சிறையில் 2-வது சம்பவமாக மேலும் ஒரு கைதி உடலை கீறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-24 18:31 GMT
மதுரை, 
மதுரை சிறையில் 2-வது சம்பவமாக மேலும் ஒரு கைதி உடலை கீறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மத்திய சிறை
மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உறவினர்கள் யாரும் பார்க்கவராத விரக்தியில் இருந்த கார்த்திக், கண்ணாடி துண்டுகளை விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 
இந்தநிலையில், 2-வது சம்பவமாக மற்றொரு கைதியும் தற்கொலை முயன்றுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முகமது உசேன்(வயது 29). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே, மதுரை சமயநல்லூர் மீனாட்சி நகரில் உள்ள பரவை மார்க்கெட் காய்கறி வியாபாரி சாமுவேல் வீட்டுக்குள் புகுந்து, 2 பெண்களை கட்டிப்போட்டு 135 பவுன் நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் முகமது உசேனை போலீசார் கைது செய்து மதுரை மத்திய  சிறையில் அடைத்தனர்.
மோதல்
அவர், பிளாக் 1-ல் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது, முகமது உசேனுக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருக்கும் மோதல் ஏற்பட்டு கைகலப்பு உருவானதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அவரை சிறைத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு கருதி 3-வது பிளாக்கில் உள்ள அறையில் அடைத்தனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து சிறைத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் 1-வது பிளாக்கிற்கு மாற்ற வேண்டும் என கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.
தற்கொலை முயற்சி
இதனை சிறை நிர்வாகம் ஏற்கவில்லை. எனவே விரக்தி அடைந்த முகமது உசேன் ஜெயில் வளாகத்தில் உள்ள டியூப்-லைட்டை எடுத்து உடைத்து கை, கால், கழுத்து, தலை உள்பட பல்வேறு இடங்களில் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிறை காவலர்கள் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக முகமதுஉசேன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உரிய சிகிச்சைக்கு பிறகு முகமது உசேனை போலீசார் மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத்து உள்ளனர். 
மதுரை மத்திய சிறையில் அடுத்தடுத்து 2 கைதிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்