ரூ.1¼ கோடியில் அவசர சிகிச்சை மைய கட்டிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்

மணக்கரை பகுதியில் ரூ.1¼ கோடியில் அவசர சிகிச்சை மைய கட்டிடம் கட்டும் பணிக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-04-24 18:21 GMT
நாகர்கோவில்:
மணக்கரை பகுதியில் ரூ.1¼ கோடியில் அவசர சிகிச்சை மைய கட்டிடம் கட்டும் பணிக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்.
அவசர சிகிச்சை மையம்
தக்கலை ஒன்றியம் நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட மணக்கரை பகுதியில் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் அவசர சிகிச்சை மைய கட்டிடம் கட்டப்படுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் செல்லும் நான்கு வழி சாலைகளில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்பட்ட மணக்கரை பகுதியில் அவசர சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தேசிய ரூர்பன் திட்டம் மற்றும் ஷியாம பிரசாத் முகர்ஜி திட்டத்தின் கீழ் ரூ.1.30 கோடி மதிப்பில் 460 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட புதிய அவசர சிகிச்சை மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பணிகளை விரைந்து முடிக்க
இதில் ரத்தவங்கி, நுண்கதிர் அறை, செவிலியர் அறை, ஊசி போடும் அறை, 5 படுக்கைகள் கொண்ட அறை, சோதனை அறை, சிறிய அறுவை சிகிச்சை அறை, ஸ்டெரிலைசேஷன், ஸ்க்ரப் அப், பின் அறுவை சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர் அறை, பரிசோதனை மையம், கிடங்கு, கழிவறை ஆகியவை அமைக்கப்பட உள்ளது. மேலும், 5 மாத காலத்திற்குள் இக்கட்டிடப் பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பிரகலாதன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, நுள்ளிவிளை ஊராட்சி தலைவர் பால்ராஜ், துணைத்தலைவர் ராஜன், உதவி திட்ட அலுவலர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு, உதவி செயற்பொறியாளர் (கட்டிடம் மற்றும் கட்டுமானம்) அருள் நெறி செல்வன், அரசு வக்கீல் ரமேஷ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
------------

மேலும் செய்திகள்