தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், ஆதனூர் ஊராட்சி கீரிப்பட்டி கிராமத்தில் 30 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் மோசமான நிலையில் நாளுக்கு நாள் இடிந்து வந்துள்ள நிலையில் பழைய நீர்த்தேக்க தொட்டி அகற்றப்பட்டது. நீர்த்தேக்க தொட்டி அகற்றப்பட்டு சுமார் 4 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை புதிய நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரிப்பட்டி, திருச்சி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனியானூர் கிராமம் இந்திரா நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது தூர்ந்து போன நிலையில், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், இந்திரா நகர், திருச்சி.
சாலையோரத்தில் பள்ளம்
திருச்சி பாரதியார் சாலையில் உள்ள ரெயில்வே திருமண மண்டபம் அருகில் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பஸ்கள் திரும்பும் இடத்தில் சாலையோரத்தில் பெரிய அளவில் பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களின் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
தகன மேடை அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அதவத்தூர் கிழக்கு பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கென்று இப்பகுதியில் தகன மேடை இல்லாததால் இப்பகுதி மக்கள் மழை பெய்யும்போது இங்கு இறப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தகன மேடை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அதவத்தூர், திருச்சி.
போக்குவரத்திற்கு இடையூறு
திருச்சி கலெக்டர் ஆபீஸ் சாலையில் இரவு நேரத்தில் ஏராளமான கால்நடைகள், குதிரைகள் சுற்றி வருகின்றன. இவற்றில் ஒரு சில கால்நடைகள் சாலையில் படுத்துக் கொள்வதினால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இதனை கவனிக்காமல் அருகில் வந்து பிரேக் பிடிப்பதினால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.