157 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்
கரூர் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
கரூர்,
கரூர் மாவட்டம் மண்மங்கலம் ஊராட்சி தண்ணீர்பந்தல்பாளையத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:- கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை தாங்களே திட்டமிட்டு கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினம் ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தின் நோக்கம் வறுமை இல்லாத ஊராட்சி என்பது, யாரும் மீண்டும் வறுமை நிலைக்கு சறுக்கி விடாத அளவிற்கு சமூக பாதுகாப்பு கொண்டு இருக்க வேண்டும். அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை சூழல் வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்தும் கிராம ஊராட்சிகளை அமைத்தல், தூய்மையை கடைப்பிடித்தல் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாத்து பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்ளத்தக்க கிராம ஊராட்சி அமைத்தல், அனைவருக்கும் குடியிருக்க மலிவான பாதுகாப்பான வீடு தேவையான அடிப்படை சேவைகளை வழங்குதல் போன்றவற்றுடன் தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட ஊராட்சியாக அமைத்திட வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக கிராம சபை கூட்டத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்துத்துறை, சுகாதாரத்துறை கண்காட்சிகள், டெங்கு விழிப்புணர்வு கண்காட்சிகளையும், மருத்துவ முகாம்களையும், மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு வில்லுப்பாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளை கலெக்டர் பார்வையிட்டார்.