385 ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு புதிய வாகனங்கள்

385 ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

Update: 2022-04-24 18:13 GMT
திருப்பத்தூர்,

385 ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

கிராம சபை கூட்டம்

திருப்பத்தூர் அருகே துவார் கிராமத்தில் பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதலாவதாக உறுதிமொழி எடுக்கப்பட்டதை தொடர்ந்து கிராமசபை குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துமடல் வாசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசும் போது, கிராம ஊராட்சிகளின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்றும் வளர்ச்சி என்பது நீடித்த இலக்குகளை கொண்டதாக இருக்க வேண்டும், உணவு, இருப்பிடம், கல்வி வேலை வாய்ப்புகள் மட்டுமன்றி மனித உரிமைகள் அனைத்தும் காப்பாற்றப்பட கிராம மக்கள் ஒற்றுமையுடன் வளர்ச்சிப் பணிகளில் செயல்பட வேண்டும் என்றார். 

6 முறை 

கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:-
 இந்திய மக்களின் நாடித்துடிப்பு கிராம ஊராட்சிகளில் இருந்தே ஆரம்பிக்கின்றது. உள்ளாட்சி நிர்வாகம் நிறைவாகவும் சரியாகவும் அமைந்து விட்டால் தேசம் வளர்ச்சியுறும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி குறித்த திட்டங்களில் திறம்பட செயலாற்றுகிறார். தற்போது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆண்டிற்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்த சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு ஊரக வளர்ச்சித்துறைக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் புத்துயிர் ஊட்டியுள்ளது. மேலும் துவார் ஊராட்சியின் சிறப்பான பணிகளை மேற்கொண்டதற்காக 2020 -2021-ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்ட விருது முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது என்றார். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று துறை சார்ந்த அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன், திருப்பத்தூர் தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தென்னரசு, ஜஹாங்கீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊராட்சிமன்றத் தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

புதிய வாகனங்கள்

பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறும் போது,
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியத்தலைவர்களின் மாதாந்திர கூட்ட அமர்வுத் தொகை 5 மற்றும் 10 மடங்காக உயர்த்தப்படவுள்ளது.. 30-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் ரூ.40 லட்சம் செலவில் நவீன வசதியுடன் கட்டப்பட உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க. ஆட்சியில் ஒன்றிய தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் அதன்பின் பழுதுகள் கூட நீக்கப்படவில்லை. தற்போது 385 ஊராட்சி ஒன்றிய ்தலைவர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படவுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சியில் எவ்வித வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தவி்ல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்