கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை அருகேகேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-04-24 18:09 GMT
களியக்காவிளை:
களியக்காவிளை அருகேகேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜகுமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் களியக்காவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விரிவிளை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் தங்களது வாகனத்தில் காரை சுமார் 3 கிலோ மீட்டர் விரட்டிச் சென்று மடக்கினர். உடனே, டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது, அதில் சிறு சிறு மூடைகளில் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து அதிகாரிகள் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து காப்பிகாடு வாணிப குடோனிலும், காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
---

மேலும் செய்திகள்