அரியலூரில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
அரியலூரில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்,
கிராம சபை கூட்டம்
தேசிய பஞ்சாயத்து ராஜ் (ஊராட்சிகள்) தினத்தையொட்டி தமிழக அரசின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. கூட்டத்திற்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் அந்தந்த ஊராட்சியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் 3 இலக்குகள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி முதல் இலக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான காற்று, நீர் நிறைந்த கிராமம் ஆகும். 2-வது இலக்கு சுத்தமான பசுமையான கிராமம் என்பது பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும். 3-வது இலக்கு குழந்தைகள் நேய ஊராட்சி என்பது குழந்தைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதாகும்.
மருத்துவ முகாம்
3 இலக்குகளை முறையாக மேற்கொண்டு சிறப்பான ஊராட்சியாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த 3 இலக்குகளையும் வருகிற 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அடுத்து வரக்கூடிய கிராம சபை கூட்டங்களில் எடுத்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள கோரிக்கைகளை குறித்து பேசினர்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்துக்குட்பட்ட விளந்தை ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி கலந்து கொண்டு பேசுகையில், கூட்டத்தில் தேர்ந்தெடுத்த 3 இலக்குகளை முறையாக மேற்கொண்டு சிறப்பான ஊராட்சியாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் அட்டை கட்டாயம் ஆகும். எனவே இந்த ஊராட்சியில் விரைவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் இப்பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தவறாது கலந்து கொண்டு மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும், என்றார்.
கலெக்டர் ஆய்வு
இதையடுத்து, கொளப்படி அருந்ததியர் காலனி பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவின் அடிப்படையில் கலெக்டர் நேரில் சென்று ஆழ்குழாய் கிணறு மின்மோட்டார் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதி மக்கள் மயானம் வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இதில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சந்தானம், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தீர்மான புத்தகம் மாயம்
ஜெயங்கொண்டம் முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்கியவுடன் சில வார்டு உறுப்பினர்கள் சாலை, குடிநீர் போன்ற பல்வேறு பணிகள் குறித்த தீர்மானங்களில் எங்களது கையெழுத்தை போலியாக போட்டு உள்ளனர். எனவே தீர்மான புத்தகத்தை நாங்கள் பார்க்க வேண்டும் என்று கூறினர். அப்போது தீர்மானம் புத்தகம் காணவில்லை என்று தெரிவித்ததையடுத்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கங்கவடங்க நல்லூர் பகுதியில் சாலை போடப்பட்டுள்ளதாக போர்டு மட்டும் உள்ளது. சாலை பணிகள் எதுவுமே நடைபெறவில்லை. காலனி பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் தார் சாலைகள், பாலங்கள், கான்கிரீட் பணிகள் தரமற்ற முறையில் போட்டு பணம் எடுத்துள்ளனர்.
வாக்குவாதம்
இதேபோல் இந்த ஊராட்சியில் ஒரே பகுதியில் 3 முறை வேலை செய்து லட்சக்கணக்கில் பணம் எடுத்ததாக பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினர். ஊராட்சியில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியவுடன் துணைத்தலைவர் கூட்டத்திலிருந்து வெளியேறினார். இதையடுத்து பொதுமக்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறாமல் ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். காலை தொடங்கிய முற்றுகை மாலை 3 மணி வரை தொடர்ந்தது.
இதையடுத்து, பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் புகார் மனுவாக அளிக்குமாறு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், கூறினார். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.