1 சதவீத வட்டிக்கு கடன் என்ற குறுஞ்செய்தியை நம்பி ஏமாந்தார்: ஆசிரியையிடம் ஆன்லைனில் ரூ.1 லட்சம் மோசடி
1 சதவீத வட்டிக்கு கடன் என்ற குறுஞ்செய்தியை நம்பி வழங்கியதில் ஆசிரியையிடம் ஆன்லைனில் ரூ.1 லட்சம் மோசடியில் மர்மநபர் ஈடுபட்டார். இது குறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
அரசு பள்ளி ஆசிரியை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே எரிச்சி பகுதியை சேர்ந்தவர் விஜிகித்தேரி (வயது 49). இவர் அரசு ஆரம்பப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்க்கை அவர் கிளிக் செய்ததில் உள்ளே சென்று பார்த்தார். 1 சதவீத வட்டிக்கு ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது அவரது செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்-அப்பில் மர்மநபர் விவரங்களை அனுப்பினார்.
இதில் ஆசிரியை விஜிகித்தேரிக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்க அனுமதிக்கப்படுவதாக மர்மநபர் கூறியிருக்கிறார். இதையடுத்து மர்மநபர் கேட்டப்படி தனது வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை நகல் உள்ளிட்டவற்றை வாட்ஸ்-அப் மூலம் போட்டோ எடுத்து ஆசிரியை அனுப்பினார். மேலும் இதற்கு குறிப்பிட்ட தொகையை பல்வேறு கட்டமாக ரூ.1 லட்சத்து ஆயிரத்து 350 வரை ஆன்லைன் மூலம் மர்மநபரின் வங்கி கணக்கிற்கு செலுத்தினார்.
போலீசார் விசாரணை
இந்த நிலையில் பணம் செலுத்திய பின் கடன் தொகையை மர்மநபர் வழங்கவில்லை. இதனால் தன்னிடம் பணத்தை மோசடி செய்தது ஆசிரியைக்கு தெரியவந்தது. இதையடுத்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் விஜிகித்தேரி புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபரின் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றை வைத்து போலீசார் விசாரித்தனர். இதில் டெல்லி முகவரி தெரியவந்தது. இதனால் அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.