நாகை போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

கஞ்சா கடத்தல் கும்பலுடன் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானதால் நாகை போலீஸ் இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-04-24 17:48 GMT
வெளிப்பாளையம்:
கஞ்சா கடத்தல் கும்பலுடன் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானதால் நாகை போலீஸ் இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து  தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.
400 கிலோ கஞ்சா பறிமுதல்
நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த மோகன் (வயது 37) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சாவை கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து  பாப்பாக்கோவிலை சேர்ந்த சரவணன் (37), கீச்சாங்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்த ஜெகதீசன் (34), அக்கரைப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த சிலம்பு செல்வன் (35), அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த நிவாஸ் (30) மற்றும் மோகன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
 இந்த நிலையில், கஞ்சா கடத்தலில் தொடர்புடைய சிலருடன் நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி சொகுசு ஓட்டலில் போலீஸ் சீருடையில் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதை தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் கொடுத்த தகவலின் பேரில், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார்.  
விசாரணைக்காக நேரில் ஆஜராக உத்தரவு
மேலும் அவரை தஞ்சையில் உள்ள டி.ஐ.ஜி. அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
கஞ்சா கடத்தல் கும்பலுடன் பிரியாணி சாப்பிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்