பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தொழிலாளர் உதவி ஆணையர்கள் தகவல்

பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது என்று தொழிலாளர் உதவி ஆணையர் தொிவித்தாா்.

Update: 2022-04-24 17:44 GMT

 கள்ளக்குறிச்சி , 

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது என்று தொழிலாளர் உதவி ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து  சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ரவி ஜெயராம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாதுகாப்பு உபகரணங்கள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் கொத்தனார், ஆண் சித்தாள், பெண் சித்தாள், பிளம்பர், மிக்ஸர், சாலை பணியாளர், எலக்ட்ரீசியன், கம்பி வளைப்பவர், பெயிண்டர், தச்சர், வெல்டர் போன்ற 11 வகையான தொழில் இனங்களில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு தலைக்கவசம், மூக்கு முகமூடி, பாதுகாப்பு முழு உடல் சேணம், வெல்டிங் முகக்கவசம், பிரதிபலிக்கும் ஜாக்கெட், பாதுகாப்பு காலணிகள், ரப்பர் கையுறை, மின்சார பாதுகாப்பு கையுறை, ரப்பர் பூட், பாதுகாப்பு கண்ணாடிகள், பாதுகாப்பு பெல்ட், காட்டன் கையுறை, பாதுகாப்பு உபகரண பை போன்ற 13 வகையான சுய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 11 வகையான தொழில் இனங்களில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள் சுய பாதுகாப்பு உபகரணங்களை பெறுவதற்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

விண்ணப்பிக்கலாம்

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் விண்ணப்பங்களை  ஆறுமுகம் லே-அவுட், முதல் தெரு, கே.கே.சாலை, விழுப்புரம் என்ற முகவரியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் அரசு வேலை நாட்களில் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்