ஒரே ஊரில் 2 இடத்தில் நடந்த போட்டி சிறப்பு கிராம சபை கூட்டத்தால் பரபரப்பு

திண்டிவனம் அருகே ஒரே ஊரில் 2 இடத்தில் நடந்த போட்டி சிறப்பு கிராம சபை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-24 17:32 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் ஒன்றியம் அண்டப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக அமராவதி விநாயகம் உள்ளார். துணைத்தலைவர் பதவிக்கு ஏற்பட்ட பிரச்சினையால் துணைத்தலைவருக்கான தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த செந்தாமரை என்பவர், துணைத்தலைவராக செயல்படலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளார்.  இந்த நிலையில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒருவர் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அதன் நகல்களை மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. 

வாக்குவாதம்

இந்த நிலையில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த ஊராட்சி மன்ற தலைவர் அமராவதி விநாயகத்திடம், துணைத்தலைவர் என்ற சீல் போட்டு கையெழுத்திட வேண்டும் என செந்தாமரை வற்புறுத்தி உள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஊராட்சி மன்ற தலைவர் அமராவதி விநாயகத்திற்கும், செந்தாமரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் அமராவதி விநாயகம் கிராமசபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதைத்தொடர்ந்து ஊராட்சி செயலாளர் பரந்தாமன், செந்தாமரை மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்களை வைத்து கூட்டம் நடத்தினார். 

பரபரப்பு

இதுபற்றி அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் அமராவதி விநாயகம் ஒலக்கூர் ஒன்றிய அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு நீங்கள் தான் தலைவர் எனவே நீங்கள் கிராம சபை கூட்டத்தை நடத்துங்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அமராவதி விநாயகம், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை வைத்து தனியாக சிறப்பு கிராம சபை கூட்டத்தை நடத்தி உள்ளார். ஒரு கிராமத்தில் இரு கிராம சபை கூட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்