தியாகதுருகம் ஒன்றியத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் அகற்றும் பணி தீவிரம்
தியாகதுருகம் ஒன்றியத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் பழுதடைந்த நிலையில்உள்ள கட்டிடங்கள் குறித்த விவரங்கள் கல்வித்துறையினர் மூலம் சேகரிக்கப்பட்டது.
இதில், 42 கட்டிடங்கள் பழுதடைந்து, மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் இருந்தது தெரியவந்தது. இது குறித்த விவரங்கள் கல்வித்துறை அதிகாரியிடமிருந்து பெறப்பட்டு, அந்த கட்டிடங்களை இடித்து அகற்ற மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று தியாகதுருகத்தில் பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடந்தது.
இதேபோல் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடதொரசலூர், பல்லகச்சேரி, பிரிதிவிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.