அங்கன்வாடி மையங்களை மக்கள் பிரதிநிதிகள் தத்தெடுக்க வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை மக்கள் பிரதிநிதிகள் தத்தெடுக்க வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் வலியுறுத்தினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை மக்கள் பிரதிநிதிகள் தத்தெடுக்க வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் வலியுறுத்தினார்.
கிராமசபை கூட்டம்
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் கதிரம்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி ஜெயக்குமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா கலந்துகொண்டார்.
அவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் அனுப்பி வைத்த வாழ்த்து மடல் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீடித்த வளர்ச்சியை அடைய அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தத்தெடுக்க வேண்டும்
இந்த ஊராட்சியை வறுமை இல்லாத ஊராட்சியாகவும், அனைவரும் நலமோடு வாழ்வதற்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் குடியிருக்க வீடுகள் வழங்க வேண்டும். அனைவருக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும். நீடித்த நிலையான வளர்ச்சி அடைய அனைவரும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முன்னுரிமை கொடுத்து மேற்கொள்ள வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அனைத்து விதமான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நமது மாவட்டத்தில் 916 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்ற. இவைகள் அனைத்தையும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒரு அங்கன்வாடி மையத்தை தத்தெடுத்து அதனை அனைத்து மாதங்களிலும் ஒரு நாள் ஒரு மணி நேரத்தை ஒதுக்கீடு செய்து அந்த அங்கன்வாடி மையங்களில் பயிலும் சிறுவர்களிடம் கலந்துரையாட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் குறைகள் ஏதும் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். சிறுவர்களுக்கு தேவையான புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்களை வழங்கலாம்.
முதன்மை மாவட்டமாக...
வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தூய்மை காவலர்களிடம் வழங்க வேண்டும். நமது மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்ற அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.