14 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம் நடத்த முயற்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்
குடியாத்தம் அருகே 14 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் அவரது தாய் திருமணம் ெசய்து வைக்க முயன்றதை கலெக்டரின் நடவடிக்கையால் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே 14 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் அவரது தாய் திருமணம் ெசய்து வைக்க முயன்றதை கலெக்டரின் நடவடிக்கையால் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
14 வயது சிறுமி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தாயுடன் வசித்து வருகிறாள். சிறுமியின் தந்தை பல வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சிறுமியின் தாய் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
7-ம் வகுப்புவரை படித்த சிறுமி குடும்ப வறுமை காரணமாக படிப்பை தொடராமல் நிறுத்தி விட்டாள் குடும்பம் நடத்த மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்ததால் அந்த சிறுமியின் தாயார் தனது மகளுக்கு வசதியான இடத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி தமிழக எல்லையோரம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த வசதியான 40 வயது நபருக்கு ஏற்கனவே 2 திருமணம் ஆகியுள்ள நிலையில் மூன்றாவதாக இந்த சிறுமியை திருமணம் செய்து கொடுக்க சிறுமியின் தாய் ஒப்புக்கொண்டார்.
அவர்களது திருமணம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கோவிலில் நடைபெற இருந்தது.
கலெக்டர் உத்தரவு
18 வயது நிரம்பிய பின்னரே பெண்களுக்கு திருமணம் நடத்த வேண்டும் என அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக 14 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததை அறிந்த சமூக ஆர்வலர்கள் அது குறித்து கலெக்டருக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து உடனடியாக அந்த சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவை தொடர்ந்து குடியாத்தம் தாசில்தார் லலிதா, வருவாய் ஆய்வாளர் கார்த்தி, கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் சைல்டு ஹெல்ப்லைன் பணியாளர் மணிசேகரன் உள்ளிட்டோர் போலீசாருடன் அந்த கிராமத்திற்கு விரைந்தனர்.
அங்கு நடத்திய விசாரணையில் 14 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம் நடத்த இருப்பது உறுதியானதை அவர்கள் அறிந்தனர்.
தடுத்து நிறுத்தம்
இதனையடுத்து அந்த சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்களிடம் 18 வயதிற்கு முன்னதாக திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என அறிவுறுத்தினர். இன்று நடைபெறுவதாக இருந்த திருமணத்தை அவர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தினர்.
மேலும் அந்த சிறுமியை வேலூரில் உள்ள குழந்தைகள் நலக் குழுமத்தின் முன் இன்று ஆஜர்படுத்துமாறு அந்த சிறுமியின் தாயாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.