தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி 251 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் கடகத்தூரில் கலெக்டர் திவ்யதர்சினி பங்கேற்பு
தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கடகத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி கலந்து கொண்டார்.
தர்மபுரி:
தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கடகத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி கலந்து கொண்டார்.
சிறப்பு கிராம சபை கூட்டம்
தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கு தேவையான கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடகத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி கலந்து கொண்டு கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார். தொடர்ந்து கலெக்டர் தலைமையில் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
விழிப்புணர்வு
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் சமமான வளர்ச்சி, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுதல், குடிநீர், சுகாதாரம், அடிப்படை கல்வி உள்ளிட்ட அனைத்து இலக்குகளையும் முழுமையாக அடைவதை நாம் குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும். குழந்தை திருமணம் என்பதே இல்லாத நிலையை உருவாக்கிட குழந்தை திருமண தடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முத்துசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், தாசில்தார் ராஜராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், கணேசன், கடகத்தூர் ஊராட்சி தலைவர் ஐவண்ணன், ஊராட்சி செயலாளர் சரவணகுமார் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.