சாலையோரம் மது குடித்ததை கண்டித்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் அரசு ஊழியர் உள்பட 4 பேர் கைது

சாலையோரம் மது குடித்ததை கண்டித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த அரசு ஊழியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-04-24 16:41 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் மதிகோன்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் தலைமையில் போலீசார் நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நல்லம்பள்ளி அருகே குறிஞ்சி நகர் சுங்கச்சாவடி அருகே காரை ஓரமாக நிறுத்தி 4 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பொது இடத்தில் அமர்ந்து மது அருந்த கூடாது என தெரிவித்தனர். அப்போது போதையில் இருந்த 4 பேரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதில், ஒருவன் நானும் போலீஸ் தான். யாரிடம் பேசவேண்டும் என சொல் பேசுகிறோம் என்று கூறியுள்ளார். மேலும் ஒருவன் பீர் பாட்டிலை காட்டி அமைதியாக சென்று விடுங்கள், இல்லையெனில் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளான். இதையடுத்து போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது ஒருவன் கல்லை எடுத்து போலீஸ் ஜீப்பின் இன்டிகேட்டரை உடைத்தான்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் டவுன் போலீசார் விரைந்து சென்று பிடமனேரியை சேர்ந்த விஜயகுமார் (வயது 40), முருகன் (51), சந்தோஷ் (35) முனிராஜ் (54) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் முருகன் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராகவும், விஜயகுமார் டீ கப் தயாரிப்பு கம்பெனி நடத்தி வருவதாகவும், சந்தோஷ் குமார் முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் என்பதும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்