சட்டசபை தேர்தல் முடிவு வெளியான பிறகு காங்கிரஸ் முதல்-மந்திரி வேட்பாளரை, கட்சி மேலிடம் அறிவிக்கும்-சித்தராமையா
சட்டசபை தேர்தல் முடிவு வெளியான பிறகு காங்கிரஸ் முதல்-மந்திரி வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவிக்கும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்
சிக்கமகளூரு:
சித்தராமையா பேட்டி
முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்கட்சி தலைவருமான சித்தராமையா தாவணகெரே மாவட்டம் ஹரிஹராவுக்கு நேற்றுமுன்தினம் வந்தார். இதையடுத்து அவர், பஞ்சமசாலே மடத்திற்கு சென்று அங்கு நடந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதற்கிடையே சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதல்-மந்திரி வேட்பாளர்
எதிர்வரும் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறும் 6 மாதங்களுக்கு முன்பே
காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படும். ராகுல் காந்தி கூறியபடி 150 இடங்களில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக வைத்து நல்ல வேட்பாளர்களை களத்தில் இறக்குவோம். 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை காங்கிரசின் அனைத்து தலைவர்கள், தொண்டர்கள் முன்னிலையில் சந்திப்போம். காங்கிரசில் முதல்-மந்திரி வேட்பாளரை தேர்தல் முடிவு வந்த பின்பு கட்சியின் மேலிட தலைவர்கள் அறிவிப்பார்கள்.
கர்நாடகத்தில் புல்டோசர் ஆட்சியை நடத்த கோரி ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறியுள்ளார். அப்படி ஒருவேளை புல்டோசர் ஆட்சி நடத்த வேண்டுமானால் முதலில் ஸ்ரீராமசேனை அமைப்பு மீது புல்டோசரை விட்டு ஏற்ற வேண்டும். மாநிலத்தில் அமைதி முக்கியம். அதனால் யார் தப்பு செய்தாலும் அவர்கள் தக்க தண்டனை அனுபவிக்க வேண்டும். இதில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எடியூரப்பாவுக்கு...
கர்நாடகத்தில் பழங்குடியினருக்கு 75 சதவீதம் மின்சாரம் இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.
எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த பிறகு அவருக்கு பா.ஜனதா கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.