மழையால் 1,000 ஏக்கர் உளுந்து, பயறு சேதம்
திருமருகல் ஒன்றியத்தில் மழையால் 1,000 ஏக்கர் உளுந்து, பயறு சேதமடைந்தது. இதனால் மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியத்தில் மழையால் 1,000 ஏக்கர் உளுந்து, பயறு சேதமடைந்தது. இதனால் மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உளுந்து, பயறு சாகுபடி
திருமருகல் ஒன்றியத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, பயறு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடியில் மழையால் குறைந்த அளவு மகசூல் கிடைத்தது.
இதைதொடர்ந்து உளுந்து மற்றும் பயறு சாகுபடி பணியை திருமருகல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திருமருகல் ஒன்றிய பகுதியில் கடந்த சில நாட்களாக திடீரென பெய்த மழையால் 1,000 ஏக்கரில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த உளுந்து மற்றும் பயறு வகை பயிர்கள் சேதமடைந்தன.
மகசூல் குறைந்தது
இதை தொடர்ந்து பயிர்களை அறுவடை செய்த போது குறைந்த அளவு மகசூல் கிடைத்தது. கடந்த ஆண்டுகளில் ஒரு ஏக்கரில் 3 குவிண்டால் வரை மகசூல் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது ஒரு குவிண்டால் தான் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், குறுவை, சம்பா, தாளடி சாகுபடியில் இயற்கை சீற்றங்களால் மககுல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து உளுந்து, பயிறு சாகுபடியை கடன் வாங்கி மேற்கொண்டு வந்தோம். தற்போது பெய்த மழையால் உளுந்து, பயறு பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்துள்ளது.
குறைந்த விலைக்கு கொள்முதல்
மேலும் அறுவடை செய்த உளுந்து மற்றும் பயறு குறைந்த விலைக்கு போகிறது. ஒரு கிலோ ரூ.65 முதல் ரூ.68 வரை கொள்முதல் செய்யப்பட்ட உளுந்து, பயறு தற்போது ரூ.50-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் செலவு செய்ததை விட மிக குறைந்த அளவே கிடைக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.