மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 28-ந்தேதி நடக்கிறது.
நாகப்பட்டினம்:
நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 28-ந்தேதி நடக்கிறது.
விளையாட்டு போட்டிகள்
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2021-2022-ம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
காலை 9 மணி முதல் நடக்கும் தடகள போட்டிகளில் கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், கை ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டம், குள்ளமானோருக்கு 50 மீட்டர் ஓட்டம், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி ஓட்டம் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
நீளம் தாண்டுதல்
மேலும் முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும், மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல் மற்றும் டென்னிஸ் பந்து எறிதல் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர் உள்ளிட்டவர்களுக்கு ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் கபடி ஆகிய போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக, குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது.
பரிசு-சான்றிதழ்
குழு போட்டிகளில் முதல் இரு இடங்களை பெறுபவர்களுக்கும், தடகள போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறும் வீரர்கள், வீராங்கனைகளுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடத்தை பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியானவர் ஆவார்கள். இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் நாகை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.