பொதுப்பணித்துறை இணை என்ஜினீயர் தேர்வில் முறைகேடு; வீடியோ வெளியாகி பரபரப்பு
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை தொடர்ந்து பொதுப்பணித்துறை என்ஜினீயர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு:
வீடியோ வெளியாகி பரபரப்பு
கர்நாடகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது பகிரங்கமாகி விசாரணை நடைபெற்று வருகிறது. சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் பாதுகாவலர் உள்பட 14 பேரை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஒரு பதவிக்கு லஞ்சமாக ரூ.80 லட்சம் வரை பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் கூட்டுறவுத்துறை பணி நியமனங்களிலும் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் பொதுப்பணித்துறையில் இணை என்ஜினீயர்கள் பணி நியமனத்திற்கு தேர்வு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. இந்த தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேள்விக்கான விடை கூறுகிறார்
அந்த வீடியோவில் உள்ள நபர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருந்தபடி, அந்த போட்டி தேர்வு வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கான விடையை சொல்கிறார். அது அவரிடம் உள்ள மின்சாதனம் மூலம் தேர்வு அறையில் உள்ள தனது நண்பருக்கு தகவல் சென்றதாக கூறப்படுகிறது. அவர் ஒவ்வொரு விடையையும் மூன்று முறை சொல்கிறார். இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தினால் மட்டுமே அதன் முழு விவரங்கள் தெரியவரும்.
அடுத்தடுத்து வெளியாகும் முறைகேடுகள்
கர்நாடகத்தில் அரசு பணி நியமனங்களுக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது அடுத்தடுத்து வெளியாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்களே உள்ள நிலையில் கர்நாடகத்தில் கமிஷன் பெயரில் ஊழல் மற்றும் பணி நியமன முறைகேடு புகார்கள் ஆளும் பா.ஜனதாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் காரணமாக பா.ஜனதா தலைவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். இந்த முறைகேடு புகார்கள் குறித்து மாநில அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மந்திரி சி.சி.பட்டீல்
இதுகுறித்து பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் கூறுகையில், "பணி நியமன தேர்வுக்கும், எனது துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எத்தனை பணியிடங்கள் என்பது குறித்து நாங்கள் அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் கூறிவிடுவோம். அந்த ஆணையம் தான் தேர்வு நடத்துகிறது. இதுகுறித்து நான் விசாரிக்கிறேன். முழு விவரங்களை பெற்ற பிறகு விவரமாக பேசுகிறேன்" என்றார்.