பிளாஸ்டிக்கை ஒழித்து எதிர்கால சந்ததிகளுக்கு நல்ல பூமியை வழங்குவோம்
பிளாஸ்டிக்கை ஒழித்து எதிர்கால சந்ததிகளுக்கு நல்ல பூமியை வழங்குவோம் என கண்ணனூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நாகா்கோவில்:
பிளாஸ்டிக்கை ஒழித்து எதிர்கால சந்ததிகளுக்கு நல்ல பூமியை வழங்குவோம் என கண்ணனூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
கிராம சபை கூட்டம்
தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. குமரி மாவட்டத்தில் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் கண்ணனூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கூட்டத்தில் பொதுநிதி செலவினம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது, தொற்று தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அதன் செலவின கணக்குகள், பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது உள்ளிட்ட விவாதங்கள் நடைபெற்றன.
அமைச்சர் மனோ தங்கராஜ்
கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:-
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். வேலை வாய்ப்புகளை உருவாக்க அதிரடி வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.
நீடித்த நிலையான வளர்ச்சி என்பதை இலக்காக கொண்டு இங்கு கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் முக்கிய பிரச்சினையாக பிளாஸ்டிக் உருவெடுத்துள்ளது. இதை ஒழிப்பதற்கு முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்களும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். பிளாஸ்டிக்கை ஒழித்து எதிர்கால சந்ததிகளுக்கு நல்ல பூமியை நாம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீர்நிலைகளை பாதுகாப்போம்
கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் பேசியதாவது:-
குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க அரசுடன் சேர்ந்து மக்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். பிளாஸ்டிக் பைகளை வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டம் விளங்க அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்.
கிராமப்புற வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. அந்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் போது தன்னிறைவு பெற்ற கிராமமாக அனைத்து கிராமங்களும் திகழும். குடிநீர் பிரச்சினை உள்பட அடிப்படை வசதிகளை தீர்ப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உறுதிமொழி
தொடர்ந்து நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் அடைவது குறித்து அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் அரவிந்த் மற்றும் அரசு அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தணபதி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மீனாட்சி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பேச்சியம்மாள், இணை இயக்குனர் (வேளாண்மை) வாணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜாண், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயன், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஜெகநாதன், திருவட்டார் தாசில்தார் தினேஷ், கண்ணனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரெஜினி விஜிலாபாய் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.