தேனி மாவட்டத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் கலெக்டர் பங்கேற்பு
தேனி மாவட்டத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
ஆண்டிப்பட்டி:
கிராமசபை கூட்டம்
தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி தமிழகத்தில் இன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. ஆண்டிப்பட்டி ஓன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள திம்மரசநாயக்கனூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
கலெக்டர் முரளிதரன்
இதில் மாவட்ட கலெக்டர் முரளிதரன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்து கடிதம் வாசித்து காண்பிக்கப்பட்டது.
இதில் திட்ட இயக்குனர் தண்டபாணி, வேளாண்மை துறை இணை இயக்குனர் அழகு நாகேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அண்ணாத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், மலர்விழி, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜாராம், ஊராட்சி மன்ற தலைவர் அட்சயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பிச்சம்பட்டி ஊராட்சியில் தலைவர் மகாலட்சுமி தலைமையிலும், கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சியில் தலைவர் காளித்தாய் தலைமையிலும், மொட்டனூத்து ஊராட்சியில் தலைவர் நிஷாந்தி ராஜன் தலைமையிலும், சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் தலைவர் ரத்தினம் தலைமையிலும், டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் தலைவர் அழகுமணி தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.
ஆர்.டி.ஓ. கவுசல்யா
உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிச்சைமணி முன்னிலை வகித்தார். தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் சுந்தர் வாசித்தார்.
கிராமசபையையொட்டி ஊராட்சி பகுதியில் உள்ள 9 வார்டுகளிலும் நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் தலைமை தாங்கினார். உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா மரக்கன்றுகளை நடவு செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் கோகிலாபுரம் பசுமை இயக்கத்தினர் மற்றும் நன்செய் தன்னார்வ இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
லட்சுமிபுரம்
பெரியகுளம் ஒன்றியம், லட்சுமிபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயமணி சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் லட்சுமிபுரம் நேருஜி தெருவை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் குடியிருப்பு அருகே 100 அடி உயரத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர். முடிவில் ஊராட்சி செயலாளர் நந்தினி நன்றி கூறினார்.
இதுபோல வடபுதுப்பட்டி ஊராட்சியில் தலைவர் (பொறுப்பு) பிரியா செந்தில் தலைமையிலும், கீழவடகரை ஊராட்சியில் தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையிலும், எண்டப்புளி ஊராட்சியில் தலைவர் சின்னப்பாண்டியன் தலைமையிலும், சரத்துப்பட்டி ஊராட்சியில் தலைவர் சாந்தி கண்ணையன் தலைமையிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.