கூடுதல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் மறியல்

கூடலூரில், கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க ேகாரி விவசாயிகள் நெல்லை தரையில் கொட்டி மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-04-24 15:24 GMT
கூடலூர்:

நெல் அறுவடை
கூடலூர் தாமரைகுளம், கப்பா மடை, வெட்டுக்காடு, ஒட்டாண்குளம், பாரவந்தான், ஒழுகுவழி சாலை, பி.டி.ஆர்.வட்டம் ஆகிய பகுதிகளில் முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கோடை, சம்பா என இரு போக நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது இந்த பகுதியில் 2-ம்போக நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த ஆண்டை போல் கூடலூர் தாமரைகுளம் பகுதி, எருக்கங்காடு பகுதி என 2 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எருக்கங்காடு பகுதியில் மட்டும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.
இதனால் நெல் அறுவடை செய்துவரும் விவசாயிகளுக்கு மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. இங்கு ஒரு எந்திரம் மட்டுமே செயல்பட்டு வருவதால் விவசாயிகள் 15 நாட்கள் வரை காத்திருக்கவேண்டிய நிலை உள்ளது. மேலும் ஏற்கனவே விவசாயிகள் அறுவடை செய்த நெல்கள் கொள்முதல் நிலையத்தில் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளதால் மற்ற விவசாயிகள் நெல்லை கொண்டுவந்து வைப்பதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

சாலைமறியல்
இதையடுத்து ஆத்திரம் அடைந்த விவசாயிகள் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி இன்று எருக்கங்காடு நெல் கொள்முதல் நிலையம் முன்பு கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் நெல்லை தரையில் கொட்டி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு சாலையோரம் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர், சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் பாரதீய கிசான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ் பாபு, முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், இயற்கை வேளாண் விவசாயிகள் சங்க தலைவர் செந்தில்குமார் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்