பலத்த மழை எதிரொலி கும்பக்கரை அருவியில் குளிக்க தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பலத்த மழை எதிரொலியால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2022-04-24 15:02 GMT
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வகையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவியில் மூலிகைகள் கலந்த தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த அருவிக்கு வந்து குளித்து விட்டு செல்வார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு நீர்வரத்து சீரானதால், கடந்த 15-ந்தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று அருவி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதைத்தொடர்ந்து அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் வனத்துறையினர் தடை விதித்தனர். இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக அருவிக்கு வந்தனர். ஆனால் அவர்கள் வனத்துறையின் தடை காரணமாக குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அருவியில் நீர்வரத்து சீரான பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்