காங்கிரஸ்-கம்யூனிஸ்டுகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொடிகளை பறித்த போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொடிகளை பறித்த போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமித்ஷாவுக்கு எதிர்ப்பு
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுச்சேரி வரும் போது அவரது இந்தி மொழி தொடர்பான கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அறிவித்திருந்தன. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில் ஒருநாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்ற புதுச்சேரி வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாரம் அவ்வை திடலில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமை தங்கினார். இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், கம்யூனிஸ்டு (எம்.எல்.) செயலாளர் சோ.பாலசுப்ரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், ம.தி.மு.க. பொறுப்பாளர் கபிரியேல், இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் விசுவநாதன், நாரா.கலைநாதன், அபிசேகம், கீதநாதன், ராமமூர்த்தி, சேதுசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தள்ளுமுள்ளு
மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடியுடன் அமித்ஷாவே திரும்பிப் போ என கோஷம் எழுப்பினார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருப்புக்கொடிகளை பறித்தனர்.
இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் செய்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினார்கள். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியார் திராவிடர் கழகம்
பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று காலை காமராஜர் சாலையில் உள்ள பாலாஜி தியேட்டர் அருகில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். இதில் துணை தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ், மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமித்ஷாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
கருப்பு பலூன்களுடன் வியாபாரி கைது
மத்திய மந்திரி அமித்ஷா வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தந்தை பெரியார் திராவிட கழகம் நிர்வாகி காளிதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில தலைவர் ஸ்ரீதர், இந்திய தேசிய இளைஞர் முன்னணி இயக்க தலைவர் கலைபிரியன், புதுவை சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் ஜெபின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதுதவிர அவர்கள் கருப்பு பலூன்களை பறக்க விட திட்டமிட்டு வியாபாரி ஒருவரை அழைத்து வந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காமராஜர் சாலை சாரம் பகுதியில் 2 சக்கர வாகனத்தில் நின்று இருந்த பலூன் வியாபாரி ஜெயக்குமார் என்பவரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து காற்று நிரப்ப பயன்படுத்தப்படும் 2 சிலிண்டர்கள், ஒரு பாக்கெட் கருப்பு பலூன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.