தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.16 கோடியில் அதி நவீன புற்றுநோய் சிகிச்சை கருவி: டீன் நேரு

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நிறுவப்பட்டுள்ள ரூ.16கோடி மதிப்பிலான அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கருவியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டீன் நேரு கூறினார்.

Update: 2022-04-24 13:51 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நிறுவப்பட்டுள்ள ரூ.16கோடி மதிப்பிலான அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கருவியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டீன் நேரு கூறினார்.
கருத்தரங்கம்
தூத்துக்குடி இந்திய மருத்துவ கழகம் சார்பில் புற்றுநோய் சிகிச்சையில் நவீன முறைகள் குறித்து டாக்டர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய மருத்துவ கழக தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் நேரு, டாக்டர்கள் மதிப்பிரகாசம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய மருத்துவ கவுன்சில் முன்னாள் தேசிய தலைவர் அருள்ராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 
தொடர்ந்து புற்றுநோயை கண்டறிதல், குணப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சி, நவீன சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்கள் மைதிலிபால், புளோரா மற்றும் டாக்டர்கள் விளக்கி கூறினர்.
சிகிச்சைகள்
நிகழ்ச்சியில் சமீபகாலமாக புகையிலை பொருட்கள், சிகரெட், மூக்குப்பொடி போன்ற பயன்பாட்டால் அதிக அளவில் புற்றுநோய் அபாயம் உள்ளது. இந்தியாவில் வாய்ப்புற்று, நுரையீரல் புற்று, பெண்களுக்கு மார்பகபுற்று, கர்ப்பப்பை வாய் புற்று ஆகியவை அதிக அளவில் ஏற்படுகிறது. 5 சதவீதம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் எடை குறைதல், தொடர் காய்ச்சல், உணவு சாப்பிடாமல் இருத்தல், உடலில் வெளிப்பகுதியில் கட்டிகள் உருவாகுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் புற்று நோய்க்கு அலோபதி முறையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு கதிர்வீச்சு, ஹீமோ தெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உடல் செல்லை மட்டும் தனியாக அழிக்கும் டார்கெட்டடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
சமீபகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அதன் மூலம் புற்று நோய் செல்களை அழிக்கும் இம்மியூனோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப கட்டத்தில் சிகிச்சைக்கு வந்தால் முழுவதுமாக புற்று நோயை குணப்படுத்தலாம். நன்கு முற்றிய பிறகு சிகிச்சை செய்தால், அதனை கட்டுப்படுத்த முடியும். ஆனால் முழுமையாக அழிக்க முடியாது. ஆகையால் தாமதம் இன்றி அறிகுறி தென்படுபவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
372 பேர்
நிகழ்ச்சியில் டீன் நேரு பேசும் போது, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தேசிய நல்வாழ்வுக்குழுமம் சார்பில் ரூ.16 கோடி செலவில் புற்று நோய் சிகிச்சைக்காக லீனியர் ஆக்சிலேட்டர் என்ற நவீன கருவி நிறுவப்பட்டு உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த கருவி இயங்கி வருகிறது. இதன் மூலம் இதுவரை 372 நோயாளிகள் சிகிச்சை பெற்று உள்ளனர். இந்த கருவியை பயன்படுத்தி அரசு டாக்டர்களால் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. 
தூத்துக்குடி தவிர நெல்லை, மதுரை அரசு ஆஸ்பத்திரிகளிலும் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கருவியின் முக்கியத்துவம் மக்களுக்கு இன்னும் சரிவர தெரியவில்லை. இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட இந்திய மருத்துவ கழக பொருளாளர் ஆர்த்தி கண்ணன், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, டாக்டர்கள் குமரன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய மருத்துவ கழக செயலாளர் சிவசைலம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்