ஊட்டி தூனேரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
ஊட்டி தூனேரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் அம்ரித் கலந்துகொண்டார்.;
ஊட்டி
ஊட்டி தூனேரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் அம்ரித் கலந்துகொண்டார்.
சிறப்பு கிராம சபை கூட்டம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம், தூனேரி ஊராட்சிக்குட்பட்ட கரக்கல் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் அனைத்து நலத்திட்ட பயன்கள், அடிப்படை சேவைகள் அனைத்தும் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுதல் ஆகியவை குறித்தும், கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வயதினரும் உடல் நலத்துடன் நல வாழ்வு வாழ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கிராம ஊராட்சியாக அமைத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசியதாவது:- பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது.
இல்லம் தேடி கல்வி திட்டம்
கிராம சபை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும். பொதுமக்களாகிய நீங்கள் அரசு துறைகளின் சார்பில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டமானது மாணவ, மாணவியர்களின் வசிப்பிடம் அருகே தன்னார்வலர்களின் பங்களிப்புடன் மாணவ, மாணவியர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்க வழிவகை செய்கிறது.
மாவட்டத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிளாஸ்டிக் பொருட்கள்
எனவே முதல் தவணை தடுப்பூசி மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கிராமப்புற மக்களாகிய நீங்கள் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் ஊட்டி ஊட்டி ஒன்றிய தலைவர் மாயன், தூனேரி ஊராட்சி தலைவர் உமாதேவி உள்பட பலர் கலந்து கொன்டனர்.
கோத்தகிரி
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெடுகுளா கிராம ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சுகுணா சிவா தலைமை வகித்தார். துணைத் தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பாரத பிரதமரின் கிசான் திட்டத்திற்கு உறுப்பினராக சேர்க்க விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. சமூக பாதுகாப்பு மற்றும் சிறந்த ஆளுமை உள்ள கிராம ஊராட்சியாக மாற்றப் பாடுபடுவோம் என மன்ற உறுப்பினர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வங்கி அலுவலர்கள், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.